என் மலர்
செய்திகள்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீரின் 'யோகி' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் யோகி பாபு. இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே, நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான 'மண்டேலா' படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் 300-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு 'அர்ஜுனன் பேர் பத்து' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
- 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன.
- தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலக மக்கள் தொகையை கணக்கிட்டால் தற்போதைய நிலவரப்படி, 823 கோடியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் 146.3 கோடியாக உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் 17.7 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டில் மட்டும் எவ்வளவு பிறப்பு எண்ணிக்கை இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. ஐ.நா. 23.1 மில்லியன் அதாவது 2 கோடியே 31 லட்சம் இருக்கலாம் என கணித்திருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 2025-ல் இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் என்று கூறியுள்ளது. இது உலகிலேயே ஒரு நாட்டில் ஆண்டில் அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதே நிலையில் 2024-ம் ஆண்டு இந்தியாவில் 2 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 498 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவை விட 3 மடங்கு அதிகம் பிறப்பு எண்ணிக்கையை கொண்டிருக்கிறது இந்தியா. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பிறப்பு எண்ணிக்கை சுமார் 7 லட்சத்து 80 ஆயிரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பிறப்பு விகிதம் என்பது கடந்த ஆண்டுகளைவிட குறைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது. 1960-களில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 6 குழந்தைகள் என்று இருந்த நிலை மாறி, இப்போது 1.9 ஆக குறைந்துள்ளது. இது 2.1 என்ற நிலைத்தன்மை விகிதத்தை விட குறைவு ஆகும்.
பிறப்பு விகிதம் குறைந்ததற்கு தாமதமான திருமணங்கள், கருத்தரிப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்புக்கான பொருளாதார செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.
2025-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில் 87 லட்சமாகவும், நைஜீரியாவில் 76 லட்சமாகவும், பாகிஸ்தானில் 69 லட்சமாகவும், காங்கோவில் 46 லட்சமாகவும், இந்தோனேசியாவில் 44 லட்சமாகவும், எத்தியோப்பியாவில் 42 லட்சமாகவும், அமெரிக்காவில் 37 லட்சமாகவும், வங்காளதேசத்தில் 34 லட்சமாகவும், பிரேசிலில் 25 லட்சமாகவும் இருந்துள்ளன.
நடப்பு ஆண்டில் (2026) இந்தியாவில் பிறப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சமாக இருக்கலாம் என ஐ.நா. கணித்திருக்கிறது. ஐ.நா.வின் கணிப்புகள் ஒருபுறம் இருக்க மத்திய அரசு 2026 ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாட்டின் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இது 2027-ல் நிறைவடையும்போது, இந்தியாவின் உண்மையான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் இன்னும் துல்லியமாகத் தெரியவரும்.
- தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார்.
- ஜோதிராதித்ய சிந்தியாவின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் 55-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டு வருகிறார். வடகிழக்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் அதே அளவு குறிப்பிடத்தக்கவை.
அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ஜெர்மனி நாட்டின் பிரபல வங்கியாக ஸ்பார்கசி உள்ளது. நாட்டின் மிக பழமையான வங்கிகளில் ஒன்றான ஸ்பார்கசி 1774-ம் ஆண்டில் அந்த நாட்டின் பெருவணிகர்களின் கூட்டு முயற்சியாலும் மன்னர்களாலும் தொடங்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் ஸ்பார்கசி வங்கி அந்த நாட்டின் நிதியை கையாண்டு பெரும் பங்கு ஆற்றியது.
தற்போது அந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஸ்பார்கசி வங்கியின் கிளை அமைக்கப்பட்டு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் அங்குள்ள ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் நகரில் ஸ்பார்கசி வங்கியின் கிளை ஒன்று உள்ளது.
இந்த வங்கியில் நகரை சேர்ந்த பலர் கணக்கு தொடங்கி வாடிக்கையாளராக இருந்து வருகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கெல்சென்கிர்சென் நகரில் இயங்கி வந்த ஸ்பார்கசி வங்கியும் கடந்த வாரம் முதல் மூடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த வங்கி கட்டிடத்தில் இருந்து தீ பரவியதற்கான எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வங்கியை சோதனையிட்டனர்.
அப்போது வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளையிடப்பட்டது தெரிந்தது. உடனடியாக வங்கி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் கருப்பு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, சொகுசு கார் ஒன்றில் வந்து கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு சாவகாசமாக வங்கி நிலத்தடி லாக்கர் அறைக்குள் துளையிட்டு உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு பெட்டிகளை திறந்து அதில் இருந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடி தப்பியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
வங்கியில் கொள்ளை போன ரொக்கம் மற்றும் நகைகளில் மொத்த மதிப்பு ரூ.300 கோடி (30 மில்லியன் யூரோ) ஆகும். அவர்கள் வந்த கார் சில நாட்களுக்கு முன்பு கிழக்கு ஜெர்மனியில் திருடப்பட்டது தெரிந்தது. வங்கி கொள்ளை குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களுக்கு வலைவீசி உள்ளதாக தெரிவித்தனர்.
- சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு, ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது.
- மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று (1-ந்தேதி) முதல் சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி-திண்டுக்கல் டெமு ரெயில், மதுரை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில்களுக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு (வண்டி எண். 20665), ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய நேர அட்டவணைபடி திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும், விருதுநகர் 9.20 மணிக்கும், கோவில்பட்டி 9.48 மணிக்கும், நெல்லை இரவு 11 மணிக்கு சென்றடையும்.
* சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) புதிய நேர அட்டவணைப்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 1.40, செங்கல்பட்டு 2.08, விழுப்புரம் மாலை 3.30, விருத்தாச்சலம் 4.14, அரியலூர் 4.49, ஸ்ரீரங்கம் 5.30, திருச்சி 6.05, மணப்பாறை 6.39, திண்டுக்கல் இரவு 7.17, சோழவந்தான் 7.49, மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.
* மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
* திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரெயில் (76835), புதிய நேர அட்டவணைப்படி, திருச்சியில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, பூங்குடி மாலை 6.44, கொளத்தூர் 6.53, சமுத்திரம் இரவு 7.01, மணப்பாறை 7.13, செட்டியபட்டி 7.23, வையம்பட்டி 7.30, கல்பட்டிச்சத்திரம் 7.39, அய்யலூர் 7.49, வடமதுரை 7.59, தாமரைபாடி 8.10, திண்டுக்கல் ஜங்சன் இரவு 9.05 மணிக்கும் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
- ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டையொட்டி 'ஜன நாயகன்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள போஸ்டரில், 'நல்லா இருப்போம்... நல்லா இருப்போம்... எல்லோரும் நல்லா இருப்போம்...' என்று வரிகளுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ இறைவனை வேண்டுகிறேன்.
2025-ம் ஆண்டு விடைபெற்று 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவருக்கும் 2026 வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் கூடிய நிறைவான வாழ்வை கொண்டு வரட்டும்.
நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
- கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- ஆங்கில புத்தாண்டை மக்கள் மழையில் நனைந்த படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை:
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் மழையில் நனைந்த படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
- வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், ஆங்கில புத்தாண்டையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.
புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.
வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
மக்களுடன் மக்களாக இணைந்து
அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.
வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று
இப்புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.






