என் மலர்
உலகம்
- கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறியது.
- காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளிக்கும் சூர்யா முராங், இரவில் விசித்திரமாக மாறுவார்.
இந்தோனேசியாவில் உள்ள முராங் குடும்பத்தின் கதையை நீங்கள் அறிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். முராங் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள் பகலில் ஒன்று, இரவில் மற்றொன்று என மாறுகின்றன. உள்ளூர்வாசிகள் அவற்றைப் பல்லிகளாகக் கருதுகிறார்கள்.
இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த சூர்யா முராங் என்ற மனிதர் 12 வயது வரை நன்றாக இருந்தார். இருப்பினும், அவருக்கு 12 வயது ஆன பிறகு, அவரிடம் விசித்திரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அவரது முகபாவனைகள் மாறத் தொடங்கின. அவரது கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறியது.
காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளிக்கும் சூர்யா முராங், இரவில் விசித்திரமாக மாறுவார்.
இந்த நிலை சூர்யாவுக்கு மட்டுமல்ல. அவரது குழந்தைகளுக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜாம்பெல்லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாஷிங்டன்:
உலகில் அதிகம் விற்பனையாகும் கால் ஆப் டூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கியவர்களில் ஒருவர் வின்ஸ் ஜாம்பெல்லா (55).
இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கிய ஜாம்பெல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த மற்றொருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜாம்பெல்லா மெடல் ஆப் ஹானர் உள்ளிட்ட கேம்களை தயாரித்து உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
- வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்றார்.
நியூயார்க்:
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நிருபர்கள் வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
வங்கதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணர வேண்டும்.
ஒவ்வொரு வங்கதேசத்தவரும் தங்களைப் பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
- துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி அங்கிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.
அங்காரா:
துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் சென்றார்.
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.
- ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வழங்குவதில் மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு.
- கடன் தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு.
மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்திய அரசு அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும் இந்திய அரசை விமர்சித்து லலித் மோடி அடிக்கடி வீடியோ வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி கலந்து கொண்டுள்ளார்.
அப்போது லலித் மோடி, நாங்கள் இரண்டு தப்பி ஓடியவர்கள். இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் எனப் பேசுவது போன்ற வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இணைய தளம் ஸ்தம்பிக்கும் வகையில் மீண்டும் ஏதோ ஒன்றை செய்யப் போகிறேன். இது உங்களுக்காகத்தான். பொறாமையால் உங்களுடைய இதயம் புழுங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகள் வழங்குவது தொடர்பான மோசடி மற்றும் பண மோசடியில் லலித் மோடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 125 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லலித் மோடி தப்பி ஓடிவிட்டார்.
விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். இவர் தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.
அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.
- இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும்.
- பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தியா- நியூசிலாந்து இடையில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA- Free Trade Agreement) ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் சுதந்திரமான மற்றும் நியாயமான ஒப்பந்தம் இல்லை என நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக தங்களுடைய கட்சி எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில் "வருந்தத்தக்க வகையில் இது நியூசிலாந்துக்கான மோசமான டீல். இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும். நியூசிலாந்தின் முக்கியமான பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. விவசாயிகளிடமும் கிராமப்புற சமூகங்களிடமும் இந்த முடிவை நியாயப்படுத்துவது சாத்தியமற்றது.
நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பால் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 13.94 பில்லியன் டாலராகும். இது நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதமாகும். இந்த ஒப்பந்தம் முக்கிய பால் பொருட்களை விலக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றார்.
மேலும், குடிபெயர்தல் விவகாரத்தில் நியூசிலாந்து நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.
- டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
- சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
- இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.
- பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.
இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.
நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.
இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் தெரிவித்தேன்.
ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் கீழ்கண்ட மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.
- அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
- ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கைகொடுத்தார்.
சுனிதா வில்லியம்ஸ்
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.
2024-25 பயணம்:
கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.
டிராகன்
ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடைய டிராகன் ப்ரீடம் விண்கலம் மூலம் இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
அன்றைய தினம் அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அதன் பின் 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் அவர்கள் இருந்தனர். இதன்பின் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்ப் அவர்களை அழைத்துப் பாராட்டினார்.

அனுபவம்
தனது விண்வெளி அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.
கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.
விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.
சுனிதா வில்லியம்ஸ் இந்த பயணத்தின்போது ஜனவரி 2025-ல் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். விண்வெளியில் அதிக நேரம் 'விண்நடை' மேற்கொண்ட வீராங்கனை என்ற பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா முறியடித்தார்.
அவர் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்தார்.
- அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.
- வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று வேலை செய்ய H-1B மற்றும் H-4 விசா பெற டிரம்ப் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இது அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். விசா முறைகேடுகளை தடுக்கவும் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஷியல் மீடியா வெட்டிங்
விண்ணப்பதாரர் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகளை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்வார்கள்.
இந்த செயல்முறையால் விசா நடைமுறைகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள ஊழியர்கள், விசா கிடைக்காததால் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.






