என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity is pride"

    • ஹேமமாலினி, டாக்டர், அழகுக்கலை நிபுணர்.
    • மிசஸ் யுனிவர்செல் தெற்கு ஆசியா பட்டம் வென்ற அழகியும் கூட.

    அழகுகலை நிபுணர், டாக்டர். ஹேமமாலினியுடன் ஒரு சிறப்பு பார்வை

    டாக்டர். ஹேமமாலினி ஒரு அழகுக்கலை நிபுணர், டாக்டர் அதுமட்டுமல்ல அவர் ஒரு மிசஸ் யுனிவர்செல் தெற்கு ஆசியா பட்டம் வென்ற அழகியும் கூட. அவர் கடந்து வந்த பாதை மற்றும் அவருடைய வெற்றிப்பயணம் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    நான் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக சந்தித்துள்ளேன். நான் கிராமத்தில் இருந்து தான் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்தேன். முதலில் வரும்போது நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கலாச்சார வேறுபாடு.

    ஏனென்றால் கிராமப்புற பகுதிகளில் வளரும் முறைக்கும், நகரங்களில் உள்ள வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதிலும் முதலில் நம்முடைய தோற்றத்தை தான் கேலி செய்வார்கள். அதாவது நகரங்களில் நாம் அணியும் உடைகளுக்கும், கிராமங்களில் உள்ள உடைகளுக்கும் வித்தியாசம் அதிகம். அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் மாற்றிக்கொண்டு தான் ஆக வேண்டும். அது தவறு கிடையாது. நாம் வசிக்கும் இடங்களுக்கு தக்கவாறு வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆனால் அந்த மாற்றத்தில் பல சிக்கல்கள் உருவாகும். அதாவது கம்யூனிகேசன். ஆங்கிலம் தெரியாமல் சிரமப்பட வேண்டி இருந்தது. நான் நடுத்தரமான குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். நான் தமிழ் வழியில் தான் படித்தேன். ஆனால் நகரப்பகுதிக்கு வரும்போது தான் இந்த ஆங்கில மொழி சிக்கல் அதிகம் இருந்தது.

    நான் கடந்து வந்த பாதை எனக்கு மிகவும் சிக்கலாக தான் இருந்தது. டீன்ஏஜ் வயதில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களால் நிறைய மனக்கசப்புகளும் நமக்கு ஏற்படும். நம்மை விமர்சிப்பவர்களும் பலர். அதனால் நான் பல மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன்.

    ஆனால் அப்படி இருந்த நான் ஒருநாள் முடிவெடுத்தேன். இவர்களது முன்னால் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். நம்மை விமர்சித்தவர்களிடம் முன்னேறி காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போது அதிகம் இருந்தது. அப்போது ஒரு ஆசிரியர் தான் என்னை உத்வேகப்படுத்தினார். நம்பிக்கையூட்டினார். என்னுடைய பிரச்சினையை அவரிடம் விரிவாக எடுத்துக்கூறினேன்.

    அவர் என்னிடம், உன்னை விமர்சித்தவர்களுக்கு நல்ல பரிசாக உன்னுடைய படிப்பை, அதாவது உன்னுடைய அடையாளத்தை பரிசாக கொடுக்க வேண்டும். நீ யார்? என்பதற்கான அடையாளம் அது. அதன் பின்னர் உன்னுடைய படிகளை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கலாம் என்று விளக்கி கூறி அதில் இருந்து வெளியே வருவததற்கு வழிகாட்டியாக இருந்தார்.

    அதனாலேயே நான் பல்மருத்துவம் படித்தேன். அதன்பிறகு என்னை அழகு விஷயத்தில் யார் அவமானப்படுத்தினார்களோ அவர்களது முன்னால் நான் ஜெயிச்சு காண்பிக்க வேண்டும் என்று அழகுக்கலை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போது அழகுக்கலை பற்றி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே அதில் முழுகவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். அழகுக்கலை பற்றி நிறைய தேடித்தேடி படித்தேன்.

    இப்போது வளர்ந்து வரும் இளம்தலைமுறைகளுக்கு நான் சொல்வது என்னவென்றால் கண்டிப்பாக எல்லா மனிதர்களுக்கும் குறை என்பது இருக்கும். அதேநேரத்தில் நமக்குள் இருக்கும் நிறைகள் நமக்கு தெரிவதில்லை. குறிப்பாக நம்முடைய முகம் நமக்கு மிகவும் பிடிக்கும். கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது முகம் அழகாக தெரியும் அது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. நம்முடைய குணத்தை அது வெளிப்படுத்தாது.

    நம்முடைய வெளித்தோற்றம் என்றுமே நம்மை பற்றி சொல்லாது. நமக்குள் இருக்கும் திறமை தான் நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்லும். தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் போதும் அது நம்மை முன்னேற பாதைக்கு அழைத்துச்செல்லும்.

    இப்போது பெண்களுக்கு நாம் அழகாக இல்லை, கலராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் இப்போது உள்ள காலக்கட்டத்தில் நிறைய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. எனவே தைரியமாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

    நான் தற்போது ஒரு என்.ஜி.ஒ.வுடன் இணைந்து மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறேன். எப்படி இது ஆரம்பித்தது என்றால் நான் ஏற்கனவே ஒரு அழகுகலை நிபுணர், நான் டாக்டர் ஆனால் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டும் என்பது எனது சின்ன வயது ஆசை. ஆனால் நான் பல்மருத்துவம் தான் படித்தேன்.

    அதன்பிறகு அழகுக்கலை மேல் ஆர்வம் அதிகம் இருந்தது. அதன்பிறகு தான் கேன்சர் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து என்னுடைய பணியை செய்ய ஆரம்பித்தேன்.

    அப்போதுதான் கேன்சரால் பாதிக்கப்பட்டு ஹீமோதெரப்பி எடுப்பவர்களுக்கு முடிகொட்டுதல், சரும வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். எனது அழகுக்கலை நிறுவனத்தின் மூலம் கேன்சர் நோயாளிகளுக்கு செயற்கை புருவங்கள் வரைவது, முடிகளை கொடுப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

    நானும் உருவ கேலிக்கு ஆளாகி இருந்ததால் அதன் வலி எனக்கு தெரியும். எனவே அவர்களுடைய வலியை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

    நாம் நமக்கான அடையாளத்தை உருவாக்கும் போது நம்மை பார்த்து கேலி செய்த விமர்சனங்கள் விலகி போய்விடும் என்பதற்கு டாக்டர்.ஹேமமாலினி ஒரு உதாரணம்.

    ×