என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு இரவு நடக்கிறது
    X

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு இரவு நடக்கிறது

    • தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளையும் வலம் வந்தது.
    • வேல் வாங்கும் போது வேலவனின் திருமுகத்தில் முத்து, முத்தாய் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளுக்கு இணையான இக்கோவிலில் தான் சூரசம்ஹாரத்திற்கு முருகப்பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்பர், சிதம்பர முனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதல், ரஷாபந்தனம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்றது.

    விழாவின் 5-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா.. கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். தேரானது அசைந்தாடியபடி 4 வீதிகளையும் வலம் வந்தது.

    பின்னர், இரவு 8 மணிக்கு அன்னை வேல் நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. வேல் வாங்கும் போது வேலவனின் திருமுகத்தில் முத்து, முத்தாய் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவர்.

    Next Story
    ×