என் மலர்
புதுச்சேரி

யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற ரீதியில் அரசு செயல்படக்கூடாது- கவர்னர் தமிழிசை
- மக்கள் மருந்தகத்தால் ரூ.7 ஆயிரத்து 500 கோடி இந்தியா முழுவதும் மக்களுக்கு மிச்சமாகியுள்ளது.
- தமிழகத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறானது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜிப்மரில் தேவையான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதிக மருந்துகள் வாங்க கூடுதலாக செலவிடவேண்டியிருந்தது. இப்போது அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகம் அவர்களுக்கு உதவும்.
மக்கள் மருந்தகத்தால் ரூ.7 ஆயிரத்து 500 கோடி இந்தியா முழுவதும் மக்களுக்கு மிச்சமாகியுள்ளது.
புதுச்சேரியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. அறிகுறி இருந்தால் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுப்போம். வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு, வித்தியாசமான காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறானது. அவர் தமிழாக்கத்தை வாசித்து முடித்தவுடன் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அதுதான் முறை. அதற்கு பிறகு சில கருத்துகளை கூறியிருக்கக்கூடாது. தேசியகீதம் இசைப்பதை கவர்னர் எதிர்பார்த்திருந்தார், நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
தெலுங்கானாவில் கவர்னர் உரையை தராததால், அந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதை தமிழக சபாநாயகர், அமைச்சர் ரகுபதி ஆகியோர் உணர வேண்டும்.
தெலுங்கானாவில் புதிய ஆட்சியில் 45 நாட்களில் 2 முறை கவர்னர் உரையை வாசித்துள்ளேன். தமிழக அரசு எதையும் சரியாக செய்வதில்லை. இதற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றம் ஒரு உதாரணம்.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இடமாற்றம் செய்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ்களை பயன்படுத்தும் பயணிகளின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கவர்னர் உரையாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நாங்கள் இப்படி தான் செயல்படுவோம், எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற ரீதியில் ஒரு அரசு செயல்படக்கூடாது. எதிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்யப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். எம்.பி. வேட்பாளர் தேர்வு இழுபறிக்கோ, தாமதத்துக்கு நான் காரணம் இல்லை.
பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதுதான் முறை. தெலுங்கானாவில் அதைத்தான் செய்துள்ளனர். புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நடைமுறை தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






