என் மலர்
புதுச்சேரி

புதுவை தலைமை செயலகத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகை: எதிர்க்கட்சி தலைவர் சிவா-நாராயணசாமி கைது
- புதுவை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது.
- ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராணயசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இ.டபிள்யூ.எஸ். 10 சதவீத இடஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் அமுல்படுத்த கூடாது என தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.
ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி புதுவை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது.
அதன் படி இன்று (வெள்ளிக்கிழமை) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்தாக அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராணயசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றது. ஆம்பூர் சாலை, கொசக்கடை வீதி சந்திப்பில் ஊர்வலத்தை போலீசார் பேரிக்கார்டுகளை வைத்து தடுத்தி நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசிலர் பேரிக்கார்டை தாண்டி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அங்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.






