search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்து- நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    புதுவை காவல் துறையில் கட்டப்பஞ்சாயத்து- நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

    • மாணவனின் இறப்பு இந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மிகுந்த வருத்தமாக உள்ளது.
    • போலீஸ் நிலையத்தில் எந்த புகார் வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    சாலை விபத்தில் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு போலீசார் மற்றும் வக்கீல் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மாணவர் வாட்ஸ்-அப் வீடியோ பதிவு செய்திருந்திருந்தார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் வீட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

    அப்போது மாணவனின் பெற்றோர் என் மகன் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அவனது ஆத்மா சாந்தியடைய வீடியோவில் கூறியபடி அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் என்றனர்.

    தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவனின் இறப்பு இந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மிகுந்த வருத்தமாக உள்ளது.

    மாணவனின் இறப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி வக்கீல் ஆகியோர் மீது வழக்கு பதியாமல், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது புதுவையில் போலீஸ்துறை ஸ்தம்பித்து போய் உள்ளது.

    போலீஸ் நிலையத்தில் எந்த புகார் வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் இடமாக போலீஸ் நிலையம் மாறியுள்ளது.

    இதற்கு காரணம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் போலீஸ் துறை சீரழிந்துள்ளது தான். மாணவர் மரண வாக்குமூலம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்க வில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ய போலீஸ் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுபோன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது வெளியே வந்துள்ளது.

    போலீஸ் துறையினரின் தவறால் மாணவனை இழந்துள்ளோம். இதற்கு முதல்-அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்த துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? போலீஸ்துறை தலைவர் போலீஸ்துறையை சீரமைக்க வேண்டும். மாணவனின் வாக்குமூலத்தின் படி பணம் பறிக்க முயன்ற காவல் துறை அதிகாரி மற்றும் இறந்ததாக இழப்பீடு கேட்ட வக்கீல் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×