search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது
    X

    புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது

    • கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர்.
    • நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜ் சாலையில் நேற்று பகல் உப்பனாறு வாய்க்காலில் முதலை குட்டி ஒன்று காணப்பட்டது.

    இதனை பாலத்தையொட்டியுள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் ஏழுமலை முதலில் பார்த்துள்ளார்.

    அவர் தனது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து முதலையை புகைப்படம் எடுத்தார். அதற்குள் அங்கு கூடிய மக்கள் சுமார் 4 அடி நீளமுள்ள முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர்.

    முதலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான பொது மக்கள் கூடினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுமக்கள் பீதியும் அடைந்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாகன சத்தத்தால் முதலை தண்ணீருக்குள் மூழ்கி ஒளிந்து கொண்டது.

    இதனிடையே முதலையை பிடிக்க வாய்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடினார்கள்.

    அங்கு வந்த வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி ஊழியர்களிடம் வாய்க்காலின் ஆழத்தை கணக்கிட கூறினார்.

    5 அடி ஆழம் இருந்ததால் நீரோட்டத்தை நிறுத்தி விட்டு முதலையை பிடிக்கலாமா.? அல்லது கூண்டு வைத்து பிடிக்கலாமா என ஆலோசித்தனர். இறுதியில் முதலையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    வாய்க்கால் கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தண்ணீருக்குள் இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்க கோழி இறைச்சியை வைத்து கூண்டு ஒன்றினை தயார்படுத்தினர். மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் வாகன நடமாட்டமும் குறைந்த பிறகு முதலை தென்பட்ட அதே இடத்தில் கூண்டை இறக்கி வைத்தனர்.

    கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    இதனையடுத்து 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.

    புதுவை நகர பகுதியில் பிரதான சாலையை இணைக்கும் வகையில் செல்லும் உப்பனாறு வாய்க்காலில் முதலை வந்தது எப்படி.? என கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளவாரி வாய்க்காலில் இருந்து முதலை தண்ணீரில் அடித்து வரப்பட்டு உப்பனாற்றுக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

    Next Story
    ×