என் மலர்
புதுச்சேரி

டிக்கெட் இல்லாமல் உள்ளே வர முயன்ற அஜித் ரசிகர்களை விரட்டி அடித்த போலீசார்
- ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
- ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளியானது.
புதுவையில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற திரையரங்குகளில் மட்டும் அதிகாலையில் படம் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் புதுவையில் சண்முகா, ரத்னா ஆகிய 2 திரையரங்குகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது.
முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறைந்த அளவிலேயே இருக்கைகள் கொண்ட சண்முகா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் காவல்துறையினர் டிக்கெட்டை பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.
டிக்கெட் இன்றி உள்ளே வந்த ரசிகர்களை போலீசார் கட்டாயத்துடன் குண்டுகட்டாக வெளியேற்றினார்கள். அப்போது ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையும் மீறி டிக்கெட் இல்லாமல் உள்ளே வர முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். திரையரங்கு வெளியே நின்று கோஷமிட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி துரத்தினர்.
முன்னதாக திரையரங்கில் வெளியே வைக்கப்பட்டிருந்த அஜீத் பேனர் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். ரத்னா திரையரங்கின் வெளியே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.






