search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவைக்குள் வர அனுமதி இல்லாததால் சென்னை திரும்பிய சொகுசு கப்பல்
    X
    புதுவை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு கப்பல்.

    புதுவைக்குள் வர அனுமதி இல்லாததால் சென்னை திரும்பிய சொகுசு கப்பல்

    • சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    புதுச்சேரி:

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுவை இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பலை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுவை உப்பளம் துறைமுக பகுதிக்கு வந்து சிறிய படகுகள் மூலம் பயணிகளை இறக்கி புதுவையை சுற்றிக் பார்க்க வைக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

    இதன் பிறகு புதுவையிலிருந்து மீண்டும் சென்னைக்கும் இந்த கப்பல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுவை பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா அரசின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    மேலும், சொகுசு கப்பல் புதுவை கடலில் நிற்க புதுவை அரசு அனுமதி தந்துள்ளதா.? அப்படி அனுமதி தந்திருந்தால் அந்த கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுவை அரசு அனுமதிக்காது என்று கூறினார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று புதுவை கடல் எல்லை பகுதிக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியவில் சொகுசு கப்பல் வந்தது.

    புதுவை கடற்கரையில் இருந்து பார்த்த போது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சொகுசு கப்பலை பார்க்க புதுவை நகர பகுதி மக்கள் கடற்கரையில் கூடினர்.

    சொகுசு கப்பல் பயணிகள் உப்பளம் துறைமுகத்துக்கு சிறிய படகுகளில் வந்து சுற்றி பார்க்க இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், காலை 8.30 மணியளவில் புதுவை கடல் பகுதியில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது.

    இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சொகுசு கப்பலை புதுவை கடலில் நிறுத்தி பயணிகளை உப்பளம் துறைமுகத்தின் வழியே இறங்கி செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

    ஆனால், புதுவை அரசு இதுவரை அனுமதி தரவில்லை. இதற்கான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் புதுவை கடலில் நின்று விட்டு திரும்பிவிட்டது என கூறினர்.

    Next Story
    ×