search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும்
    X

    கோப்பு படம்.

    இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்றத்தை கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்கியதில் கையூட்டு பெறப்பட்டதாக நான் கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நான் ஆதாரத்தை காட்டுகிறேன்.

    சட்டப்பேரவை வளாகம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம், அப்போதைய கவர்னரால் திரும்ப பெறப்பட்டு சென்னை ஐகோர்ட்டு அதனை தள்ளுபடி செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, முதல்- அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை உரியவர்க ளிடம் ஒப்படைக்காமல், 2018-ம் ஆண்டு ஒப்படைத்ததன் காரணம் என்ன?

    இதுசம்மந்தமாக அவர் விருப்பப்பட்டால், சி.பி.ஐ. விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதற்கு அவர் பதில் கூறட்டும். 10 ஆண்டுகள் இழுத்தடித்த மர்மம் என்ன? அதில் தரப்பட்ட கையூட்டு என்ன? வைத்திலிங்கம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். 2014- ம் ஆண்டு எனது தொகுதியில் பூரணாங்குப்பம் முதல் புதுகுப்பம் வரை கேபிள் வயர் புதைப்பதற்காக டெண்டர் ரூ.11 கோடிக்கு விடப்பட்டது. ஆனால் ரூ. 2 கோடி கூட பணி நடைபெறவில்லை. 1 வருடம் கூட கேபிள் வேலை செய்யவில்லை.

    இதேபோல் காலாப்பட்டு தொகுதியில் கடலோர கிராமங்களில் புதைவட கேபிள் போட ரூ.23 கோடியில் ரூ.2 கோடி கூட செலவு செய்யவில்லை. இதற்கும் சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும். சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.

    அரசு விழாக்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை மதித்து அழைக்கிறோம். ஒரு சில இடங்களில் தவறு நடந்திருந்தது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமியும், எதிர்கட்சி தலைவரும் கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது அதனை நாங்கள் பெற்றுத் தந்திருக்கிறோம். இதற்கு மத்திய அரசுக்கும், கவர்னருக்கும் முதல்- அமைச்ருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாராயணசாமி வீண் விளம்பரம் தேடுகிறார். மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசின் கடைசி முதல்- அமைச்சராக நாராயணசாமி இருப்பார் என கூறியிருந்தார். அதுதான் நடந்தது.

    ராகுல்காந்தி புதுவைக்கு வந்து மீனவ கிராமத்தில் பேசியபோது, அரசை பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டினார். அதை கூட நாராயணசாமி, ராகுலிடம் மாற்றி கூறினார். அப்படிப்பட்ட நபர் நாராயணசாமி.

    இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும். அதிகாரிகள் செய்த சிறு பிழை காரணமாக மானியம் தடைப்பட்டுள்ளது. 2 நாளில் சரி செய்து வழங்கப்படும்.

    இன்னும் 1 மாதத்தில் புதிய சட்டப்பேரவை கட்ட டெண்டர் வைக்கப்படும். டிசம்பர் மாதம் பிரதமர் மோடி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார்.2 ஆண்டுகளில் புதிய சட்டபேரவை கட்டி முடிக்கப்பட்டு, முதல்- அமைச்சர் ரங்கசாமியால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    Next Story
    ×