என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சினிமா ஆபரேட்டர் மீது தாக்குதல்
- பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.
- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சண்முகா வீதியை சேர்ந்தவர் அருண் (32) காமராஜர் சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.
அருண் தனது மனைவி குழந்தைகள் மற்றும் நண்பர் ஸ்டீபன் ஆகியோருடன் புதுவை கடற்கரைக்கு சென்றார். அங்கு குழந்தைகள் பொம்மை கேட்டுள்ளனர்.
உடனே அவர் நேரு சிலை அருகே பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.
அந்த பெண் அதிக விலை கூறியதாக தெரிகிறது. அதற்கு அருண் இவ்வளவு விலை சொல்கிறீர்களே என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் அவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி சொன்ன விலைக்கு பொம்மையை வாங்கி செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பக்கத்தில் கடை வைத்திருந்த வாலிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் அவர்களை திட்டி, இரும்பு பைப்பால் அருணையும், ஸ்டீபனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பொம்மை கடை வைத்திருந்தது செல்வி என்பதும் பக்கத்து கடைக்காரர் மணி மற்றும் அவரது மனைவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வி, மணி மற்றம் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.






