என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    படி...படி... என்று சொன்னதால் ஆத்திரம்.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்
    X

    படி...படி... என்று சொன்னதால் ஆத்திரம்.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்

    • பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் தங்கபாண்டி இளங்கலை வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • தங்கபாண்டிக்கு சரிவர படிப்பு வரவில்லை. மேலும் அவர் சரியாக படிக்காமல் சுற்றித்திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் அசோகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு தங்கபாண்டி(19) என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் தொழுவம் அமைத்துள்ளார்.

    தங்கபாண்டி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இளங்கலை வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தங்கபாண்டிக்கு சரிவர படிப்பு வரவில்லை. மேலும் அவர் சரியாக படிக்காமல் சுற்றித்திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாரியப்பன் அவரை அடிக்கடி நன்றாக படி... படி... என்று கூறி சத்தம் போட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் தங்கபாண்டியை சரியாக படிக்கவில்லை என்று கூறி மாரியப்பன் சத்தம்போட்டதாகவும், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்கபாண்டி ஒருவித மனஅழுத்தத்தில் இருந்து வந்ததோடு தனது தந்தை மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். மாரியப்பன் வீட்டின் முன்பகுதியில் உள்ள வராண்டாவில் தூங்கினார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கி கொண்டி ருந்த தங்கபாண்டி, வீட்டின் பின்புறம் தொழுவத்தில் இருந்த பாறாங்கல்லை தூக்கி வந்து திடீரென வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த தனது தந்தை மாரியப்பன் தலையில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சகுந்தலா, கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்த போது மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்த நிலையில் அதற்குள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கொலை குறித்து மேலப்பாளையம் போலீசார் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாரியப்பன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியை தேடினர்.

    மாநகர போலீஸ் கமிஷ னர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தங்க பாண்டியை தேடி வந்தனர். அப்போது வெளியூருக்கு தப்பித்து செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த தங்கபாண்டியை தனிப்படையினர் பிடித்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×