என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 2-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிப்பு
- மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக காணப்படுகிறது.
இதில் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.),கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் மொத்தம் வினாடிக்கு 18,900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இந்த நீர்வரத்து பிலிகுண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்றுமாலை நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக வந்தது. தற்போது நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்கவும், 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஸ் தடை விதித்துள்ளார்.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருவியில் குளிக்க தடைவிதிப்பால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையில் நின்றவாறு ஆற்றில் ஓடும் தண்ணீரை ரசித்து பார்த்தனர்.
பின்னர் அவர்கள் மீன்சாப்பாடு, பொறித்த மீன்கள் வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






