என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தருமபுரி:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 33 அயிரத்து 589 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 920 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கபினி அணை நேற்று நிரம்பியது. இதன்மூலம் இந்த ஆண்டில் 2-வது முறையாக கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 407 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 983 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது.

    இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 963 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக வந்தது. மேலும் அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    அதே அளவு நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவியின் அழகையும், காவிரி ஆற்றின் அழகையும் கண்டு ரசித்தவாறு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×