என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் சதுர்த்தி விழா- கண்களை கவரும் வண்ண விநாயகர் சிலைகள் தயார்
- புரசைவாக்கம் கொசப்பேட்டையில் அடி 12 அடி உயரம் வரையிலான பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.
- இந்த ஆண்டு புதிதாக சாய்பாபா வடிவில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் கண்களை கவரும் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி சென்னையில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு விதமான தோற்றங்களில் கண்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணங்கள் பூசி மெருகேற்றப்பட்டு உள்ளன.
புரசைவாக்கம் கொசப்பேட்டையில் அடி 12 அடி உயரம் வரையிலான பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர் காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன.
கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன் தெரு, உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
இந்த ஆண்டு புதிதாக சாய்பாபா வடிவில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிங்கம், புலி வடிவில், வித்தியாசமான தோற்றங்களில் கலர்புல் வண்ணத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.






