என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி தண்ணீர்- சிக்கி தவித்த 25 பேர் மீட்பு
- அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது.
- அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் அங்கு சென்றார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த 25 பேரை வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி மாண்டஸ் புயல் மழையால் நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேறிய உபரிநீர் ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதில் அங்கு வசித்து வந்த மக்கள் வெளியேற முடியாமலும், வீட்டினுள் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமலும் அவதிக்குள்ளாயினர்.
இது குறித்து அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் அங்கு சென்றார்.
தொடர்ந்து குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்புத் துறையினர் கயிறு கட்டி 25 பேரை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் கணபதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான பொருள்களை தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறையினர் வழங்கினர்.