என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு மூழ்கியது- கடலில் குதித்து மீனவர்கள் உயிர் தப்பினர்
- கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு கடலில் மூழ்கியது.
- பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
சீர்காழி:
கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு கடலில் மூழ்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட 4 மீனவர்கள் இன்று அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசை படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.
இதனை கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் வானகிரி மீனவர்கள், மாற்று படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பிலான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.






