என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டிரைவர்கள் போராட்டம்
    X

    கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டிரைவர்கள் போராட்டம்

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
    • திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று முதல் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த உள்ளூர் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கு நிரந்தர தீர்வாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனை வலியுறுத்தி கடந்த மாதம் திருமங்கலத்தில் கடையடைப்பு, போராட்டங்கள் நடைபெற்றன.

    மேலும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டக் குழுவினர் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் இன்று முதல் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத வாகனங்களை அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்தது. இதற்கு டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இன்று காலை வழக்கம் போல் திருமங்கலத்தில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தினால் தான் அனுமதிக்க முடியும் என கூறி பள்ளி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இன்று அரையாண்டு தேர்வு நடப்பதால் அதற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்தனர். டிரைவர்கள் பல முறை கேட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் பள்ளி வாகனங்களை அனுமதிக்கவில்லை.

    இதனால் டிரைவர்களுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கார், லாரி உள்ளிட்ட மற்ற டிரைவர்களும் அங்கு திரண்டு சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை குறித்து அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

    தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து டிவைர்கள் பள்ளி வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். சுங்கச்சாவடி பிரச்சினையில் மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் தேர்வு எழுத செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    Next Story
    ×