search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளிநாட்டு போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்- டி.ஜி.பி. எச்சரிக்கை
    X

    தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளிநாட்டு போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது கைது நடவடிக்கை பாயும்- டி.ஜி.பி. எச்சரிக்கை

    • போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் 'லிப்ட்' மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினரும் கைதாகி உள்ளனர். மீண்டும் ஒரு சிலர் வந்திருக்கலாம் என்கிற செய்தி வந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதுபோன்று வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கைது செய்வோம். சந்தேக நபர்கள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம்.

    இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர் போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழகத்தில் அமைப்பது தொடர்பா காலப் போக்கில் உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

    பெண் காவலர் விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே உரிய விசாரணை நடத்தி உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த மறுநிமிடமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சம்பவம் நடந்த அன்றே வழக்கு போடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அதன்பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெண் காவலர்கள் மீது தாக்குதல் என்றால் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படையில் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காவலர்கள் சில நேரங்களில் கடுமையான பணிகளை மேற்கொள்ளும் போது, ஆயுதம் ஏந்திய குற்றவாளிகளை பிடிக்க முற்படும்போதும் சில நேரங்களில் காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கூட பூமிநாதன் என்கிற காவலர் படுகொலை செய்யப்பட்டார். காவல் துறை பணி ரிஸ்க் ஆனதுதான்.

    இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்பதுதான் தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். அதையும் செய்து வருகிறோம்.

    கஞ்சா 4.0 வேட்டை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

    பணி காலத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்தினருக்கு பணி வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு 1,600 பேருக்கு பணி வழங்கப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு காவலர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு முதல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்கள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை 'டுவிட்' போட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். புகார் தெரிவித்த உடனேயே வழக்கு போடப்பட்டுள்ளது எனவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    Next Story
    ×