search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆரல்வாய்மொழி பள்ளியில் மோதல் விவகாரம்- 12 மாணவர்கள் சஸ்பெண்டு
    X

    ஆரல்வாய்மொழி பள்ளியில் மோதல் விவகாரம்- 12 மாணவர்கள் சஸ்பெண்டு

    • சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் சிலர் கோஷ்டியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வந்தன. நேற்றும் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

    காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    மோதல் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரகுமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசினர்.

    இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மேகலிங்கம் மற்றும் மேலாண்மைக் குழுவினரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 12 மாணவர்களை ஒரு மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்தும், ஒரு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை விடுக்கப்பட்டது.

    மாணவர்கள் மோதல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.

    அரசு பள்ளியின் அருகே உள்ள கோவில் மைதானம் மற்றும் தெருக்களில் பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல வெளியில் உள்ள இளைஞர்களும் பைக் ரோமியோக்களாக மாறி நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கின்றனர்.

    எனவே இந்தப் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

    Next Story
    ×