search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு: பொது போக்குவரத்து நிறுத்தம்
    X

    மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு: பொது போக்குவரத்து நிறுத்தம்

    • பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி மதகடி பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு தினத்தில் வி.சி.க.வினர் மற்றும் ஒரு சமூகத்தினர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு அதே இடத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு தரப்பினர் தங்களது புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று காவல் துறையில் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தனர்.

    இதுதொடர்பாக மயிலாடுதுறையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் நேற்று இரவு (5.12.22) 10 மணி முதல் (10.12.22) தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அப்பகுதியில் இரண்டு நபர்களுக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவதும், அரசியல் கட்சிகளின் கொடிகள் பேனர்கள் வைப்பதும் தடை செய்யப்படுவதாகவும் புதிதாக படத்திற்கு யாரும் மாலை மரியாதை செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து பட்டவர்த்தி மதகடி பகுதியில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பட்டவர்த்தி பகுதிக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து காவல்துறையினர் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். 21 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் முக்கிய சாலையான பட்டவர்த்தி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேன்கள் மூலம் பள்ளி செல்வதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பட்டவர்த்தியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    காலை முதலே வஜ்ரா வாகனம், தீயணைப்புத் துறை வாகனம் ஆகியவை மதகடி பகுதியில் வரவழைக்கப்பட்டு காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

    Next Story
    ×