search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்னசேலம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பு தொடங்கியது
    X

    ஆன்-லைன் வகுப்பு

    சின்னசேலம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பு தொடங்கியது

    • கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.
    • 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்புகள் கடந்த 17-ந்தேதி போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறைகளை சூறையாடினர். அதோடு அங்கு நின்ற வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள், பஸ்கள், வகுப்பில் உள்ள மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமானது.

    மாணவி ஸ்ரீமதி இறந்த நாளில் இருந்து இந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.

    எனினும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக கள ஆய்வுக்கு சென்றார். அப்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன் முதல் கட்டமாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் ஆன்-லைன் வகுப்பு தொடங்கியது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை இன்று ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளை நேரடியாக தொடர்பு கொண்டு வகுப்புகளை நடத்தினர்.

    மேலும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கனியாமூரை சுற்றியுள்ள 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் நேரடி வகுப்புகளை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×