search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திராவிடம் வளர துடிப்பான இளைஞர்கள் இணைய வேண்டும்- அமைச்சர் சேகர்பாபு
    X

    திராவிடம் வளர துடிப்பான இளைஞர்கள் இணைய வேண்டும்- அமைச்சர் சேகர்பாபு

    • தி.மு.க.விற்கு என்று ஒரு பெருமை உண்டு.
    • பாராளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசியதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான், ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்டு, ஜனநாயக ரீதியாக உட்கட்சித் தேர்தல் ஒன்று நடைபெறுகிறது என்றால், அது தி.மு.க.வில் மட்டும் நடந்தேறுகிறது.

    ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக்கத்தோடு நின்று விடாமல், இன்று புதிதாகப் பதவிக்கு வந்தவர்களை, ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றார்.

    கழகத் தொண்டனுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், கழக உறுப்பினர் யாராவது தேவை என்று வந்தாலும், அதை நிறைவு செய்ய வேண்டும்.

    தி.மு.க.வில் மட்டும் தான், அறிக்கை விடுவதும், ஆணைகள் பிறப்பிப்பதும், அதோடு நின்றுவிடாமல், களத்திற்கு வந்து நம்மோடு நின்று போராடக்கூடிய ஒரு தலைவர்தான் தி.மு.க. தலைவர் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

    தி.மு.க.விற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல இயக்கங்களில் போனவுடன், ஒரு மாதம், இரண்டு மாதக் காலங்களில் பொறுப்புகளை வழங்கி விடுவார்கள். ஆனால், தி.மு.க.வில் மட்டும் தான், உறுப்பினராக இருப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால், இந்த இயக்கம் என்பது ஓர் ஆலமரத்தின் வேரைப் போன்றவர்கள்; இந்த இயக்கத்தில் இருக்கின்ற நிர்வாகிகளான நாமெல்லாம் அதனுடைய விழுதுகள் போன்றவர்கள். இந்த இயக்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. இந்த இயக்கத்திற்கு என்று ஒரு தனி சரித்திரம் உண்டு. இந்த இயக்கத்திற்கென்று இருக்கின்ற சரித்திரங்களையும், பெருமைகளையும் தூக்கி நிறுத்துகின்ற தலைவராக, இந்த இயக்கத்தினுடைய இரு வண்ணக்கொடியை, இந்த இயக்கத்தினுடைய சின்னமான உதயசூரியனை தகத்தகாயமாக ஒளிர வைக்கின்ற தலைவராக, நம்முடைய தலைவர் இருக்கின்ற வரையில், தமிழகத்தில் எத்தனை சங்கிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும், எத்தனைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும், இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியாது.

    திராவிட மண்ணிலே திராவிடம்தான் ஆள வேண்டும் என்றால், இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றால், அதிலும் துடிப்புமிக்க இளைஞர்கள் இயக்கத்திற்குத் தேவை. அந்த இளைஞர்களை வரவேற்கின்ற ஒரு கூட்டமாக இந்தக் கூட்டத்தை நான் முன்னிலைப்படுத்தி, இந்தக் கூட்டத்திலே வருங்காலத்தில் இளைஞர்களை அதிகமாகக் கொண்டு வந்து சேர்ப்போம் என்ற உறுதியேற்கின்ற கூட்டமாக இந்தக் கூட்டத்தை எடுத்துக் கொண்டு, தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற 15-வது உட்கட்சித் தேர்தல் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களுடைய பணி தான், உங்களுடைய அயராத பணிதான், மத்திய சென்னையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர், அவ்வப்பொழுது டெல்லிக்குச் செல்லுகின்ற நிலையை உருவாக்குகின்ற வல்லமைப் பெற்ற நிர்வாகிகள்தான் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டி. எந்த சக்தியாலும், தமிழகத்தில் தி.மு.க. இருக்கின்ற வரையில், வேறு யாருக்கும் இங்கே இடமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்றால், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடுவதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

    Next Story
    ×