search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை- கும்கிகள் மூலம் பின்தொடரும் வனத்துறையினர்
    X

    3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை- கும்கிகள் மூலம் பின்தொடரும் வனத்துறையினர்

    • பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
    • 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.வனவிலங்குகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.

    அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன் மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் மனிதர்களை அச்சுறுத்திய யானைக்கு கருப்பன் என பெயரிட்டனர். பின்னர் கும்கியானைகள் உதவியுடன் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி அடித்தனர்.

    மீண்டும் கடந்த 2 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் அந்தக் கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வந்தது.

    யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் ஒற்றை கருப்பன் யானையை கும்கி யானை கொண்டு வந்து பிடிக்க வேண்டும் என வனத்துறை வாகனத்தை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்தனர்.

    அதை தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் என 3 கும்கி யானைகள் ஜோரகாடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி மாவட்ட வனப்பாதுகாவலர் ராஜ்குமார், ஆசனூர் வனக்கோட்ட உதவி இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரகர்கள் ராமலிங்கம் (ஜீர்கள்ளி) சதீஸ் (தாளவாடி) தினேஷ் (கேர்மாளம்) கால்நடைதுறை மருத்துவர்கள் சதாசிவம் (சத்தியமங்கலம்), விஜயராகவன் (ஆனைமலை), ராஜேஷ்குமார் (முதுமலை), பிரகாஷ் (ஓசூர்) தலைமையில் 150 வன ஊழியர்களுடன் கருப்பன் யானையை பிடிக்க ஆபரேசன் தொடங்கப்பட்டது.

    கடந்த புதன் இரவு விடிய விடிய காத்திருந்தும் கருப்பன் யானை வரவில்லை. பின்னர் வியாழன் இரவு இடத்தை மாற்றிய கருப்பன் யானை இரியபுரம், மல்குத்திபுரம் பகுதியில் நுழைந்தது. அங்கு சென்ற குழுவினர் கருப்பன் யானையை சுற்றிவளைத்தனர். ஆனால் அனைவரையும் துரத்தி பசுமாட்டை காயப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியது.

    இதையடுத்து 3-வது நாளாக நேற்று இரவு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் காத்திருந்தனர். அப்போது தோட்டத்தில் வரும்போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க குழுவினர் தயார்நிலையில் இருந்தனர். அதேபோல் மல்குத்திபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் கருப்பன் யானை புகுந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கருப்பன் யானையை குழுவினர் சுற்றி வளைத்தனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தப்பட்டது. பாதி மயக்கத்தில் இருந்த கருப்பன் யானை விவசாய தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து மேலும் 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 3 மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயக்கம் அடையாமல் சென்றது. இதையடுத்து கும்கிகளுடன் வனத்துறையினர் கருப்பன் யானையை பின்தொடர்ந்து வனப்பகுதிக்கு சென்றனர். இன்று மாலைக்குள் கருப்பன் யானை பிடிக்கப்படும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×