search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாளவாடியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம்- மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை பிடித்த வனத்துறையினர்

    • வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த புலிகள் காப்பகத்துக்குள் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளால் அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்து வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து ஒரு ஒற்றை காட்டு யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தது.

    அப்போது தோட்டத்து காவலில் இருந்த 2 விவசாயிகளை அந்த யானை அடித்து கொன்றது. தொடர்ந்து அந்த யானை இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களுக்குள் வந்து பயிர்களை நாசம் செய்தது. அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

    இந்த நிலையில் அந்த யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும் அந்த யானைக்கு கருப்பன் என்று பெயரிட்டு அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    முதல்கட்டமாக கருப்பன் யானையை விரட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகளை வனத்துறையினர் தாளவாடிக்கு கொண்டு வந்தனர்.

    இந்த கும்கிகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. இதையடுத்து கும்கிகள் மீண்டும் டாப்சிலிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சில நாட்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்த கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டத்துக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் ஆகிய 3 கும்கிகள் தாளவாடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைத்தது. அந்த நேரத்தில் மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து அடுத்தடுத்து 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் சிக்காமல் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து 2-வது முறையாகவும் கும்கி யானைகள் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் விவசாய தோட்டங்களை நாசம் செய்ய தொடங்கியது. இதையடுத்து தாளவாடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து கடந்த மாதம் 20-ந்தேதி பொம்மன், சுஜை என 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டது. இந்த கும்கிகளும் கருப்பன் யானையை மடக்கியது. கடந்த 25-ந்தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் கருப்பன் யானை வழக்கம்போல் தப்பியது.

    இதனால் கருப்பன் யானையை பிடிக்க முடியாத சூழல் உருவானதால் 2 கும்கிகளும் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் வழக்கம்போல் கருப்பன் யானை மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கியது. கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த யானையை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு வனத்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து காட்டு யானைகளை விரட்டி பிடிப்பதில் நீண்ட அனுபவம் பெற்ற 2 கும்கிகளை அழைத்து வர முடிவு செய்தனர். அதன்படி 4-வது முறையாக கடந்த 15-ந்தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கும்கிகள் மாரியப்பன், சின்னதம்பி லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த கும்கிகள் தாளவாடி பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் யானையின் வழித்தடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் 2 கும்கிகளுடன் தாளவாடி மகராஜன்புரம் என்ற பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது அவர்கள் எதிர்பார்த்தபடியே கருப்பன் யானை கரும்பு தோட்டத்துக்கு வந்தது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வனத்துறை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கருப்பன் யானை பாதி மயக்கத்தில் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

    இதையடுத்து கும்கிகள் உதவியுடன் கருப்பன் யானை கயிறுகளால் கட்டப்பட்டது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான லாரியில் கருப்பன் யானையை ஏற்றினர்.

    ஒரு ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம் செய்த கருப்பன் யானை பிடிபட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர்.

    Next Story
    ×