என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுபிரேத பரிசோதனை நடைபெறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள காட்சி
சின்னசேலம் வன்முறை எதிரொலி- மாணவி உடல் இன்று மறுபிரேத பரிசோதனை
- மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை பெற்றோர் ஏற்கவில்லை. தங்களது மகளின் சாவில் மர்மம் உள்ளது என கூறி உறவினர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் வன்முறையாக வெடித்தது. போராட்ட கும்பல் பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை சூறையாடி தீ வைத்தனர். இந்த வன்முறையில் ரூ.20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகள் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்த மருத்துவ குழுவில் தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் சாந்தகுமாரி தலைமையில் விழுப்புரம் டாக்டர் கீதாஞ்சலி, திருச்சி டாக்டர் ஜெயந்தி, சேலம் டாக்டர் கோகுலநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இதேபோல மருத்துவ குழுவினரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.
இதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சந்தேகப்படும் நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






