என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 கொத்தனார்கள்- ஒருவர் மீட்பு
    X

    மீட்கப்பட்ட கார்த்திகேயன் - ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ரகு

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 கொத்தனார்கள்- ஒருவர் மீட்பு

    • தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையினால் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தரைப்பாலத்தில் படர்ந்திருந்த பாசி வழுக்கி விழுந்து, 2 மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு தினங்கள் மழை பெய்யுமெனவும், இது படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையினால் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் வரும் நீர் திருக்கோவிலூரில் உள்ள அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையின் உபரிநீர் பெண்ணையாறு, கோரையாறு, மலட்டாறு வழியாக வெளியேற்றப்படுகிறது. அதன்படி திருக்கோவிலூர் அணை நிரம்பியதால் உபரிநீரானது பெண்ணையாறு, கோரையாறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசீலன், இவர் புதியதாக வீடு கட்ட கடந்த 11-ந் தேதியன்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கினார். இங்கு விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகேயுள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 30), காத்தவராயன் (வயது 32), மேல்வாளை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38) ஆகிய 3 பேரும் கொத்தனார் பணி செய்து வருகின்றனர்.

    வேலையை முடித்துவிட்டு 2 மோட்டார் சைக்கிளில் 3 பேரும் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது கொங்கராயனூரில் இருந்து அறளவாடி செல்ல தென்பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து சென்றனர். அப்போது தரைப்பாலத்தில் நீர்வரத்து அதிகரிக்கவே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தரைப்பாலத்தை கடந்தனர்.

    அப்போது தரைப்பாலத்தில் படர்ந்திருந்த பாசி வழுக்கி விழுந்து, 2 மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆற்றில் குதித்து மேல்வாளை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனை மீட்டனர். மற்ற 2 பேரையும், 2 மோட்டார் சைக்கிளையும் மீட்ட முடியவில்லை.

    இத்தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து தேடி வருகின்றனர். இருப்பினும் அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ரகு, காத்தவராயன் ஆகிய இருவரும் மீடகப்படவில்லை. தகவலறிந்து சுற்றுவட்டார கிராம மக்கள் அங்கு வருவதால் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் பெண்ணையாற்றில் நீர் திறக்கும்போது மாவட்ட நிர்வாகம் கரையோ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. தரைப்பாலத்தில் நீர் ஓடும்போது அதனை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதனை மீறி பொதுமக்கள் செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.

    Next Story
    ×