search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.நகர் தொழில் அதிபர் கடத்தலில் கைதான பெண் டாக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு
    X

    தி.நகர் தொழில் அதிபர் கடத்தலில் கைதான பெண் டாக்டருக்கு திடீர் உடல் நலக்குறைவு

    • சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.
    • நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபர். இவரை கடந்த 20-ந் தேதி மர்ம கும்பல் காரில் கடத்தியது. இதைதொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரத்திலேயே சரவணன் மீட்கப்பட்டார்.

    விசாரணையில் தொழில் அதிபர் சரவணன் ரூ.1 கோடி பணத்தகராறில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ், கோவை சிறைக்காவலர் நாகேந்திரன், கரூர் அரவிந்த்குரு, திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ், மதுரையை சேர்ந்த அஜய், விஜயபாண்டி என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரிந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடத்தலுக்கு காரணம் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வரும் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பது தெரிய வந்தது.

    சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.

    அவர்களுக்கு இடையே பணப்பிரச்சினை இருப்பதை அறிந்து சரவணன் கடத்தலுக்கு டாக்டர் அமிர்தா திட்டம் வகுத்து கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

    இதையடுத்து டாக்டர் அமிர்தாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே நள்ளிரவு சிறையில் இருந்த டாக்டர் அமிர்தாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நள்ளிரவு 1 மணி அளவில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    அமிர்தாவின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×