search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு புதுவை மாணவர்கள் தயாராக வேண்டும்: பாரதிய ஜனதா வேண்டுகோள்
    X

    நீட் தேர்வுக்கு புதுவை மாணவர்கள் தயாராக வேண்டும்: பாரதிய ஜனதா வேண்டுகோள்

    நீட் தேர்வுக்கு புதுவை மாணவர்கள் தயாராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பாரதம் முழுவதும் மருத்துவ துறைகளில் நடைபெறும் ஊழலை தடுக்கவும், குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் வெளிமாநில மாணவர்கள்கூட மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கொடுத்து, நிர்வாக ஒதுக்கீடு சீட்டை பெற்று தரமான டாக்டராக உருவாகாத நிலையை மாற்றவும், வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்படும் ‘நீட்’ எனப்படும் பொது அறிவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    தற்போது, புதுவையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், புதுவை அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, புதுவைக்கு ‘நீட்’ தேர்வில் விலக்களிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.

    அனைத்து மாநிலங்களும் ‘நீட்’ தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள ஆணையை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்திய நாள் முதல், புதுவை அரசு கல்வித்துறை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிளஸ்-2 படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஏழை மாணவர்களுக்கு இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என புதுவை பா.ஜனதா கோரி வந்தது.

    ஆனால், இவற்றையெல்லாம் செயல்படுத்தாத முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சட்டமன்ற தீர்மானத்தை நம்பி ஏமாற வேண்டாம். நம் நாடு முழுவதும் இந்த ஆண்டு கட்டாயம் ‘நீட்’ தேர்வு நடைபெறும். ‘நீட்’ தேர்வில் தேர்வாகும் மாணவர்கள் மட்டுமே சென்டாக் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையாக உள்ளது.

    மேலும், அந்தந்த மாநில மாணவர்களுக்கு பிற மாநிலங்களெல்லாம் 50 சதவீத ஒதுக்கீடு வழங்குவது போல் புதுவை அரசும் வழங்க போராட வேண்டும். நன்றாக படிக்காமலும், நல்ல மதிப்பெண்கள் எடுக்காமலும் பணத்தை மட்டுமே செலவு செய்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து விடலாம் என்ற நிலையை மாற்றி, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்கள்கூட மருத்துவம் படிக்க முடியும் என்ற கனவின் பிரதிபலனே இந்த ‘நீட்’ தேர்வு முறை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×