என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி: சிங்கப்பூர் அணியை பந்தாடிய இந்தியா- அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி: சிங்கப்பூர் அணியை பந்தாடிய இந்தியா- அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

    • 11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
    • இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றது.

    ஹாங்சோவ்:

    11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் 'பி' பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றது. நவ்னீத் கவுர், மும்தாஜ் கான் தலா 3 கோலும், நேஹா 2 கோலும், லால்ரெம்சியாமி, உதிதா, ஷர்மிளா, ருதுஜா தலா ஒரு கோலும் போட்டனர். முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை (11-0) வென்றிருந்த இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் ஜப்பானுடன் (2-2) டிரா கண்டிருந்தது.

    முன்னதாக இதேபிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் 6-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான் தலா 7 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசம் அடிப்படையில் இந்தியா முதலிடத்தை பிடித்தும், ஜப்பான் அணி 2-வது இடம் பெற்றும் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. தாய்லாந்து (3 புள்ளி) 3-வது இடமும், சிங்கப்பூர் (0) கடைசி இடமும் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

    'ஏ' பிரிவில் நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் சீனா அணி 20-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை ஊதித்தள்ளி 'ஹாட்ரிக்' வெற்றியோடு முதலிடத்தை உறுதி செய்தது. முன்னாள் சாம்பியனான தென்கொரியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் 2-வது இடத்தை பிடித்தது. இவ்விரு அணிகளும் சூப்பர்4 சுற்றை எட்டின. மலேசியா (3 புள்ளி) 3-வது இடமும், சீன தைபே (0) கடைசி இடமும் பெற்று வெளியேறின. சூப்பர் 4 சுற்று நாளை ஆரம்பமாகிறது.

    Next Story
    ×