என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பையில் வெண்கலம்: இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு
- 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின
- இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 28-ந்தேதி சென்னை, மதுரையில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி ஸ்பெயினை வீழ்த்தியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கில் ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
ஸ்பெயினுக்கு 2-வது இடம் கிடைத்தது அந்த அணியின் சிறப்பான நிலை இதுவாகும். இதற்கு முன்பு ஸ்பெயின் அணி 2 முறை (2005, 2023), 3-வது இடத்தை பிடித்ததே சிறந்ததாக இருந்தது.
முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெர்மனி அணிக்கு உலக கோப்பையை வழங்கினார். அந்த அணி வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். மேலும் ஸ்பெயின் வீரர்களுக்கு வெள்ளி பதக்கத்தையும், இந்திய வீரர்களுக்கு வெண்கல பதக்கத்தையும் அணிவித்தார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ரம், பீகார் மாநில விளையாட்டு துறை மந்திரி ஸ்ரேயாசி சிங், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ஜூனியர் உலக கோப்பையில் வெண்கல பதக்கம் வென்று சாதித்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அணியில் உள்ள பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கப்படுகிறது.
2005, 2021, 2023 ஆகிய 3 முறை இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தோற்று 4-வது இடத்தை பிடித்தது. தற்போதுதான் முதல் முறையாக சொந்த மண்ணில் 3-வது இடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தது.
முன்னதாக நடந்த 5-வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் முடிவில் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5-வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்துக்கு 6-வது இடம் கிடைத்தது.
பிரான்ஸ்-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7-வது இடத்தை பிடித்தது. நியூசி லாந்துக்கு 8-வது இடம் கிடைத்தது.






