என் மலர்
புதுச்சேரி

சமையல் கியாஸ் வரி 5 சதவீதமாக குறைப்பு- வீடுகளுக்கு குழாய் மூலம் சப்ளை செய்யும் பணி தீவிரம்
- மேட்டுப்பாளையம் பகுதியில் கியாஸ் பகிர்வு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் குழாய் மூலம் சமையல் கியாஸ் வழங்குவதற்கு தேவையான பணிகளை செய்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் சுமார் 1,400 கி.மீ. நீளத்துக்கு சமையல் கியாஸ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 7 பெட்ரோலிய எண்ணெய் முனையங்கள், 13 சமையல் கியாஸ் இணைப்பு மையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மண்டகப்பட்டு, வழுதாவூர், பிள்ளையார்குப்பம், ஊசுடு, பூத்துறை வழியாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் வரை குழாய் அமைக்கப்படுகிறது.
இதில் புதுச்சேரி மாநிலத்தில் 6கி.மீ.தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் கியாஸ் பகிர்வு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து புதுச்சேரியின் பிற பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் கியாஸ் வினியோகம் செய்யப்படும். இந்தநிலையில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கும் வகையில் புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசின் வணிக வரித்துறை கூடுதல் செயலாளர் முகமது மன்சூர்வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் -2007 (சட்டம் எண்.9, 2007) பிரிவு 31 மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தியும், புதுச்சேரி கவர்னர் பொது மக்கள் நலன் கருதி, வரியை குறைக்க முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு 14.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக வரி குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






