search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கினியா நாட்டில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மாலுமிகள் உள்பட 26 பேரும் விரைவில் மீட்பு- மத்திய மந்திரி முரளீதரன் தகவல்
    X

    கினியா நாட்டில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மாலுமிகள் உள்பட 26 பேரும் விரைவில் மீட்பு- மத்திய மந்திரி முரளீதரன் தகவல்

    • சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள்.
    • இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கினியா நாட்டில் கச்சா எண்ணெய் ஏற்ற சென்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் ஆப்பிரிக்க கடல் பகுதியில் கினியா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது.

    சரக்கு கப்பலில் தமிழகத்தை சேர்ந்த 3 மாலுமிகள் உள்பட 26 இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை உறவினர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் மத்திய, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக, கேரள மாலுமிகள் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு உணவு, குடிநீரின்றி தவிப்பதாகவும், தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் உடனே தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உருக்கமான கோரிக்கை விடுத்தனர்.

    சிறை வைக்கப்பட்ட மாலுமிகளை மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவர்களை நார்வே கடற்படையிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்களை மீட்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்காக இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தை பின்பற்றுகின்றன. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இதனால் கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×