search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது
    X

    ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது

    • நீண்ட நேரம் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
    • வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட தயராக இருந்தது.

    விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்த சில வினாடிகளில் விமான நிலையத்திற்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதை கேட்டதும் அதிகாரிகள் பதறி போனார்கள். உடனே அவர்கள் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சென்னை விமானத்தை புறப்பட வேண்டாம் என உத்தரவிட்டனர்.

    மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறக்கப்பட்டனர். அதன்பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்திற்குள் சென்று சோதனை நடத்தினர்.

    நீண்ட நேரம் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னரே வெடிகுண்டு இருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

    இதையடுத்து விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் விமான நிலையத்திற்கு வந்த டெலிபோன் நம்பர் குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணி என தெரியவந்தது. உடனடியாக அவரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்தேன். ஆனால் விமான நிலையத்திற்கு வர தாமதம் ஆகிவிட்டது. இதன் காரணமாக அதிகாரிகள் என்னை விமானத்தில் ஏற்றவில்லை. பயணம் செய்யவும் முடியாமல் போனது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×