search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 6 என்ஜினீயரிங் மாணவர்கள் கடலில் மூழ்கினர்
    X

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது 6 என்ஜினீயரிங் மாணவர்கள் கடலில் மூழ்கினர்

    • திடீரென ராட்சத அலை வந்து கடலில் குளித்துக் கொண்டு இருந்த மாணவர்களை இழுத்துச் சென்றது.
    • கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மாணவர்களை தேடும் பணி மீண்டும் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஜஸ்வந்த் குமார், பவன் சூரியகுமார் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெகதீஷ், குண்டூர் சதீஷ்குமார், சூரி செட்டி தேஜா கணேஷ், லோகேஷ், சின்ன ராஜபேட்டை சேர்ந்த தினேஷ் சிவமணி முஹம்மத் பரஹான், பூரி ராமச்சந்திர சேகர், சந்துரு ஆகியோர் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

    நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர்கள் 12 பேரும் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். அங்கு ஆபத்தான பகுதி. இங்கு யாரும் கடலில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்து இருந்தனர். அதையும் மீறி மாணவர்கள் கடலில் குளித்து விளையாடினர். சந்துரு என்ற மாணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடலில் குளிக்காமல் கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ராட்சத அலை வந்து கடலில் குளித்துக் கொண்டு இருந்த மாணவர்களை இழுத்துச் சென்றது. லோகேஷ், தினேஷ், சிவமணி, முகமது பர்ஹான் ஆகியோர் கடல் அலையில் இருந்து தப்பி கடற்கரைக்கு வந்தனர்.

    அவர்கள் அலறல்சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கடல் அலையில் சிக்கிய சூரி செட்டி தேஜா, பவன் சூரியகுமார் ஆகியோரை மீட்டனர். இதில் பவன் சூரியகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். சூரி செட்டி தேஜாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படகு மூலம் கடலில் இழுத்துச் சென்ற 5 மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் மாணவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இன்று காலை படகு மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மாணவர்களை தேடும் பணி மீண்டும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×