என் மலர்
இந்தியா

உத்தரகாண்டில் மீண்டும் மேக வெடிப்பால் கனமழை: வீடுகள்-வாகனங்கள் சேதம்
- தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு சமோலி மாவட்டம் தாராலி உள்ளிட்ட பகுதியில் மேகவெடிப்பால் வானம் பொத்துக்கொண்டு ஊத்தியது போல இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாராலி சந்தை வளாகம், செப்பான் சந்தைகள் கடும் சேதத்தை சந்தித்தது. இங்குள்ள பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. பல இடங்களில் நிலச்சரிவால் வாகனங்கள் சேதம் அடைந்தது.
சக்வாரா கிராமத்தில் கட்டிடங்கள் இடிந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சக்வாராவில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளம்பெண் உயிர் இழந்தார். பலரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. தாராலி-குவால்டம் சாலை மற்றும் தாராலி-சக்வாரா சாலை மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.






