search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி
    X
    பூஸ்டர் தடுப்பூசி

    பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை - மருத்துவ நிபுணர்கள் கருத்து

    நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு 3-வது தடுப்பூசி செலுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 106 கோடியே 31 லட்சமாக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை டிசம்பர் மாதம் தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் இரண்டு டோஸ்களில் வீரியம் குறையும் நேரத்தில் 3-வது டோஸ் தேவைப்படுகிறது. நிலைமையை பொறுத்து அடுத்த ஆண்டு 3-வது டோஸ் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.

    மத்திய அரசு

    ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் நிறுவனம் தங்களது ‘கோர்பேவெக்ஸ்’ பூஸ்டர் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி வைரசின் நினைவை தக்க வைத்துக் கொள்கிறது. ஒருநபர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு செல்கள் வைரசை அடையாளம் கண்டு நோய் கிருமியை கொல்லும். இது நோய் எதிர்ப்பு நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று அல்லது தடுப்பூசிக்கு பிறகு நீடித்த பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே அடிப்படை ஆகும். எனவே பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை. ஆரோக்கியமான நபர்களுக்கு இது அவசியம் இல்லை.

    மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு 3-வது தடுப்பூசி செலுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி மற்றும் பரிந்துரைகளை நிபுணர்கள் பார்க்கிறார்கள். வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    தற்போது எங்களின் முக்கிய கவனம் தடுப்பூசி திட்டத்தை அனைவருக்கும் விரிவுப்படுத்துவதை உறுதி செய்வது ஆகும். பூஸ்டர் டோஸ்கள் பரிந்துரை செய்யப்பட்டால் மருத்துவ ரீதியாக தேவைப்படும் நபர்களுக்கு முதலில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    Next Story
    ×