search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல ரவுடி கைது
    X

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல ரவுடி கைது

    சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை அடுத்த ஓடைவெளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது முதலியார் பேட்டை சுப்பு கொலை வழக்கு, விழுப்புரத்தில் நடந்த ஜெனா கொலை வழக்கு,

    ஏனாம் ஜெயிலில் மர்டர் மணிகண்டனை கொல்ல முயன்ற வழக்கு மற்றும் லாஸ்பேட்டையில் அரிசி வியாபாரியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    மேலும் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி வழக்குகளும் இவர் மீது உள்ளன.

    இந்த நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் போலீசாரின் பிடியில் சிக்காமல் தனது கூட்டாளிகள் மூலம் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அஸ்வினை போலீசார் தேடி வந்தனர். அதோடு அஸ்வினை பிடிக்க பிடிவாரண்டு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதிரடிப்படை போலீசார் அஸ்வினை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரவுடி அஸ்வின் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ரவுடி அஸ்வின் தப்பி ஓடினார். ஆனால், போலீசார அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் இருந்த வீச்சரிவாள், செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்வின் 2 பவுன் தங்க செயின் வைத்திருந்தார்.

    இது குறித்து அஸ்வினிடம் போலீசார் விசாரித்த போது அந்த செயின் கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்குளம் பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் பறித்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து தங்க செயினையும் பறிமுதல் செய்து அஸ்வினை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×