என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளாகாத ராணி வெங்கடேசனை வெற்றிபெற செய்யுங்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டுகோள்
    X

    ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளாகாத ராணி வெங்கடேசனை வெற்றிபெற செய்யுங்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேண்டுகோள்

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனை ஆதரித்து ஏரலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரச்சாரம் செய்தார்
    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனை ஆதரித்து ஏரலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு தங்களது குழந்தைளை படிக்க வைக்கின்றனர். ஆனால், 14 வயது முதல் 16 வயது வரையுள்ள மாணவர்கள் படிப்பதற்கு பதில் குடித்து வருகின்றனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளையும் சாராய கடைகளையும் திறந்துவைத்துள்ள ஜெயலலிதா குடிமக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறார். இப்படிப்பட்ட ஜெயலலிதாவை வாக்காளர்களான நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    மக்கள் பாதிக்கப்பட்டால் நாட்டை ஆள்பவர்கள் காப்பாற்ற வர வேண்டும் என்பது நியதியாகும். ஆனால், சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதவர் ஜெயலலிதா. இதே போல் பாதிப்பு இப்பகுதியில் ஏற்பட்டால் உங்களை காப்பாற்ற அவர் வரமாட்டார். கடந்த காலங்களில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மை இடமாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. புதிய தொழிற்சாலைகளும் வருவதில்லை. பழைய தொழிற்சாலைகளும் மூடப்படுகின்றன.

    சாத்தான்குளம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக ராணி வெங்கடேசன் இருந்தபொழுது ஊழல் குற்றசாட்டுகளுக்கு ஆளாகாமல் மக்கள் பணியாற்றியவர். தனது சொத்தை விற்று அரசியல் செய்து வருகிறார். எனவே அவரை மிகப்பெரிய வெற்றி பெற செய்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன், திருப்பணிச் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்புலிங்கம், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர்கள் செந்தில்குமார், சாரதி, விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×