என் மலர்


எமன் கட்டளை
எமன் சொல்லும் கட்டளையை 60 நாட்களில் முடிக்க முயற்சிக்கும் நாயகனின் கதை
கதைக்களம்
சினிமா கனவில் சுற்றும் நாயகன் அன்பு, சொந்த படம் தயாரிப்பதற்காக, தனது நண்பருடன் ஒரு திருமண மண்டபத்தில் நகைகளை கொள்ளையடிக்கிறார். அந்த திருமணம் நின்றுவிட அவமானத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மணமகள் சந்திரிகா மற்றும் அவரது தந்தை டி.பி.கஜேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக நினைக்கும் அன்பு, குற்ற உணர்ச்சியால் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறார். இறந்த பிறகு எமலோகம் சென்று எமனையும் சந்திக்கிறார். யாரும் இறக்கவில்லை என்று அன்புவுக்கு புரியவைக்கும் எமன், '60 நாட்களில் சந்திரிகாவுக்கு திருமணத்தை நீ நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில் தலைவெடித்து இறப்பாய்' என்று கூறி மீண்டும் உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்புகிறார்.
எமன் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்று பூமிக்கு திரும்பும் அன்பு, சந்திரிகாவின் திருமணத்தை 60 நாட்களுக்குள் நடத்தி வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அன்பு, கதாபாத்திரத்துக்கு சிறப்பாக பொருந்தி தந்தை மயில்சாமியின் பெயரை காப்பாற்றி இருக்கிறார். சந்திரிகாவின் திருமணத்துக்காக படாதபாடு படும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குடும்ப பாங்கான தோற்றத்தில் வசீகரிக்கும் நாயகி சந்திரிகா, அலட்டாத நடிப்பிலும் அலங்கரிக்கிறார்.
எமனாக வரும் நெல்லை சிவா, டி.பி.கஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எளிமையான கதைக்களத்தை கையில் எடுத்து வேடிக்கையான முறையில் முழுக்க பொழுதுபோக்கு படைப்பாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ராஜசேகர். நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லாஜிக் மீறல்களை கவனத்தில் கொள்ளாதது பலவீனம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
என்.சசிகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது.
தயாரிப்பு
ஸ்.எ கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.










