என் மலர்


வெட்டு
கதைக்களம்
அம்மாவின் அரவணைப்பில் வளரும் நாயகன் ராகின் ராஜ், அம்மா மீது அதீத பாசம் கொண்டவராகவும், அவருக்காக எதையும் செய்ய துணிந்தவராகவும் இருக்கிறார். திடீரென்று அவரது அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்படும் நிலையில் அவரது அப்பா யார்? என்பதையும், அவரை விட்டு தான் பிரிந்ததற்கான காரணத்தையும் சொல்வதோடு, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றும் கூறுகிறார்.
அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது அப்பாவை தேடி உத்தரப் பிரதேசத்திற்கு செல்கிறார் ராகின் ராஜ். அங்கு தனது அப்பா வேறு திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக வாழ்வதை தெரிந்துக் கொள்கிறார். இருந்தாலும், தனது அம்மாவுக்காக அவரை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறான்.
இறுதியில் தனது தந்தையை ராகின் ராஜ் அழைத்து சென்றானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்து இருக்கும் ராகின் ராஜ், ரத்தத்தைப் பார்த்தாலே பயப்படுகிற இயல்பிலிருக்கும் தன்னை கோழியை அறுக்கச் சொல்லும்போது மிரள்வது, அறுபட்ட கோழி துடிக்கும்போது அதிர்ச்சியடைவது, துணிச்சலை உருவாக்கிக் கொண்டு கோழியை வெட்டுவது என அப்பாவித்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அங்கிதா, எளிமையாக இருந்தாலும், தனது இயல்பான நடிப்பு மூலம் கவர்ந்து இருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ரோகித் மற்றும் அவரது மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர் தம்பதி, தங்களது சிக்கன் கடை காமெடி மூலம் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதா, மத வெறியனாக வருகிற முக்கு அவினாஷ், பழிவாங்கத் துடிக்கிற விஜி சந்திரசேகர், காட்டுவாசி கெட்டப்பில் வேங்கை அய்யனார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
தந்தை தேடி செல்கின்ற மகன் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அம்மா ராஜசேகர். இதில் காதல், ஆக்ஷன், அம்மா சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக சேர்த்து கொடுத்து இருக்கிறார். அதிகமான வன்முறை காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
இசை
தமன் இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. அஸ்லாம் கேயி'யின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.
தயாரிப்பு
sreenivasa goud நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










