என் மலர்


வசூல் மன்னன்
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் வசூல் மன்னன்.
பொறியியல் பட்டதாரியான நாயகன் ஸ்ரீதேவா, பலரிடமிருந்து பல லட்சங்கள் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காமல் தப்பித்து வருகிறார். எங்கு சென்றாலும் கடன்காரர்கள் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, சிறு வயதிலிருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகி நிவேதா, அதற்காக எவ்வளவு பணம் செலவாகினாலும் தயாராக இருக்கிறார்.
இந்த ஆசையை தெரிந்து கொண்ட ஸ்ரீதேவா, அதையே வாய்ப்பாக பயன்படுத்தி அவரிடம் பொய் சொல்லி பணம் வாங்க திட்டமிடுகிறார். நட்பாக தொடங்கும் அவர்களின் பழக்கம், நம்பிக்கையாக மாறும் தருணத்தில், நாயகனின் உண்மை முகம் நிவேதாவுக்கு தெரிய வருகிறது.
இதனால் கோபமடையும் அவர், போலீஸ் ஆன பிறகு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இறுதியில் நிவேதா நினைத்தது நடந்ததா? ஸ்ரீதேவா எதற்காக இத்தனை கடன் வாங்கினார்? கடனை அடைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
சின்னத்திரை மற்றும் துணை வேடங்களில் நடித்துப் பழகிய ஸ்ரீதேவா, நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். அப்பாவியான முகம், நம்ப வைக்கும் பொய் பேச்சு, இயல்பான உடல்மொழி என கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிவேதா, புதுமுகம் என்றாலும், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.
நாயகியின் தந்தையாகவும், வில்லன் வேடத்திலும் வரும் வேல ராமமூர்த்தி, வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். நாயகனின் மாமாவாக நடித்திருக்கும் சரவண சக்தி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள், கதையை நகர்த்த உதவுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இயக்கம்
காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வேல் குமரேசன். பழைய பாணியிலான கமர்ஷியல் கதையை அதே பழைய பாணியிலேயே சொல்லியிருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அதற்கேற்ற வலுவான துணை நட்சத்திரங்கள் இல்லாதது வருத்தம்.
ஔிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஆர். எண். சிவகுமார், குறைந்த முதலீட்டுக்குள் தரமான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
இசை
பரணி இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரகத்தில் உள்ளன. பின்னணி இசை காட்சிகளோடு சேர்ந்து பயணிக்கிறது.










