என் மலர்


வல்லவன் வகுத்ததடா
ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் பண தேவை என்பது ஏற்படுகிறது. இவர்களிடத்தில் எதிர்பாராவிதமாக கோடிக்கணக்கிலான பணம் கிடைக்கிறது. இந்த பணம் உண்மையில் கடைசியாக யார் கையில் சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கதைக்களம்
காவலாளியாக இருப்பவர் தனது இளைய மகளின் சீமந்தம் மற்றும் பிரசவ செலவுக்கு பணம் தேவை படுவதால் வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார். இவரின் மருத்துவ செலவுக்கு மூத்த மகள் பணம் கேட்டு உறவினர்கள், நண்பர்களை நாடுகிறார். மேலும் தந்தை கொண்டு வந்த பணம் காணாமல் போக, அதை கண்டு பிடிக்க போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? தன் தந்தையின் உயிரை மூத்த மகள் காப்பாற்றினாரா?
இந்த கதையுடன் இளம்பெண் ஒருவர் ஆண்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றி பணம் பறிக்கிறார்.
நண்பர்கள் இருவர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக சின்ன சின்ன பண திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி.. வாங்கிய கடனை அடைப்பதற்காக புகார் தருபவர்களிடம் லஞ்சம் வாங்குகிறார்.
உடல் உறுப்புகளை மட்டுமே நம்பி அவர்களுக்கு நிதி உதவி செய்யும் பைனான்சியர், கொடுத்த பணத்தை எல்லாம் வசூல் செய்து வருகிறார்.
இந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் ஒரே சமயத்தில் பண தேவை ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் உள்ள வாகனம் கை மாறுகிறது.
இதில் உள்ள பணம் இறுதியில் யார் கையில் சென்றடைந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம். கதையின் நாயகனாக நடித்திருக்கும் சரண் தேஜ்ராஜ் மற்றும் அவரது நண்பராக நடித்திருக்கும் ரெஜின் ரோஸ் இயல்பான நடிப்பால் மனதை கவர்ந்து இருக்கிறார்கள். சுவாதி மீனாட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
ஹைபர் லிங்க் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை.
மிகவும் சிக்கலான கதையை குழப்பி எடுத்து இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் மட்டுமே சுவாரஸ்யமான காட்சிகள் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கலாம். திரைக்கதையில் பகவத் கீதையின் பொன்மொழிகள் அத்தியாயங்களாக பயன்படுத்தி இருப்பது சிறப்பு.
இசை
சேவியரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தயாரிப்பு
ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் "வல்லவன் வகுத்ததடா " திரைப்படத்தை தயாரித்துள்ளது.









