என் மலர்


வல்லான்
ஒரு கொலை, அதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை சொல்லும் கதை.
கதைக்களம்
தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் துப்பு கிடைக்காமல் திணறுகிறது. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார். சுந்தர்.சியின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தாலும் விடைக்கிடைக்காமல் குழப்பம் அடைகிறார்.
இறுதியில் தொழிலதிபரை கொலை செய்தது யார் என்பதை சுந்தர் சி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை, இவரை சுற்றியை கதை நகர்வதால், கதாபாத்திரத்தை உணர்ந்து அவரும் நடித்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நடிப்பு மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மங்களை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன். படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து விடுகிறார். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் குறைந்து விடுகிறது. படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை பல திருப்பங்கள் வைத்து சுவாரசியப்படுத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இசை
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
VR Della Film Factory நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











