என் மலர்


தீதும் சூதும் எந்தன் முகவரி
பணத்திற்காக தன் சொந்த காதலியை கடத்தும் இளைஞன் குறித்த கதை.
கதைக்களம்
நாயகன் ஶ்ரீ மற்றும் அவரது நண்பர் சீனிவாசனும் நாயகி அங்கனா ஆர்யாவை கடத்துகிறார்கள். மேலும் அங்கனாவை நிர்வாணமாக படம் பிடித்து அவரது தந்தை அவினாஷுக்கு அனுப்பி கோடிகணக்கில் பணம் கேட்கிறார்கள்.
கடத்தப்பட்ட அங்கனாவிற்கு தன்னை கடத்தியது தன் காதலன் ஶ்ரீ என்பது தெரிய வருகிறது. இதன் பிறகு இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.
இறுதியில் காதலன் ஶ்ரீயே, அங்கனாவை கடத்த காரணம் என்ன? பணத்தை கொடுத்து தன் மகளை அவினாஷ் மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, முதல் பாதியில் யதார்த்தமாகவும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் கலந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகி அங்கனா ஆர்யா, காதல், அழுகை, வருத்தம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். சீனிவாசன் மற்றும் அவினாஷ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜித்தா மோகன். பணத்திற்காக கடத்தல் என்ற கதை ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்து இருந்தாலும், திரைக்கதையின் போக்கை மாற்றி இருப்பது சிறப்பு. பட்ஜெட்டிற்கு ஏற்ப படத்தை கொடுத்து இருக்கிறார்கள். நான்கு பேரை சுற்றியே கதை முழுவதையும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.
இசை
பிரணவ் கிரிதரனின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
பராந்தகனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
படத்தொகுப்பு
புவனேஷ் மணிவண்ணன் படத்தொகுப்பு சிறப்பு.
புரொடக்ஷன்
ஜெயந்தி புரொடக்ஷன் நிறுவனம் ‘தீதும் சூதும் எந்தன் முகவரி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









