என் மலர்


தரைப்படை
மக்களின் பேராசையை வெளிச்சம் போட்டு காட்டும் கதை
கதைக்களம்
பிரஜன், ஜீவா, விஜய் விஸ்வா ஆகிய மூன்று பேரும், ஒரு பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள தங்கத்தையும் வைரத்தையும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காக யாரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லவும் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களின் முயற்சியில் யாரெல்லாம் பலியாகிறார்கள்? அந்த தங்கமும் வைரமும் யாருக்கு சொந்தமானது? அதை கைப்பற்றும் முயற்சியில் ஜெயித்தது யார்? ஜெயித்தவர் அதை வைத்து என்ன செய்கிறார்? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரஜன், ஒரே உடையில் உலா வருகிறார். இவரது தோற்றமும், உடல் மொழியும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. மும்பையில் இருந்து வந்து தனது குடும்பத்தை தேடும் ஜீவா, ரஜினி ஸ்டைலில் நடித்து இருக்கிறார். விஜய் விஷ்வா வில்லத்தனத்தால் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.
மூன்று ஹீரோக்களுக்கும் ஷாலினி, மோகனசித்தி, சாய் தன்யா என மூன்று ஜோடிகள். மூன்று பேருக்கும் அதிக வேலை இல்லை. கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
அதிக வட்டி தருவதாக சொல்லி, கட்டுகிற பணம் இரட்டிப்பாகும் என்று சொன்னால் அதை அப்படியே நம்பி ஏமாறும் மக்கள், அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஏமாற்றும் நபர்கள் என பார்த்துப் பழகிய கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா. ஒருவர் ஏமாற்றிச் சேர்த்ததை இன்னொருவர் கொள்ளையடிப்பது, அதை சுருட்ட இன்னொரு தரப்பு முயற்சிப்பது, அங்கிருந்து இன்னொரு தரப்பு அபகரிப்பது என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். இன்னும் விறுவிறுப்பான காட்சிகளையும், சுவாரஸ்யமான காட்சிகளையும் வைத்திருந்ததால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒரே மாதிரியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம்.
இசை
மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களையும், பின்னணி இசையையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.









