என் மலர்


சொட்ட சொட்ட நனையுது
வழுக்கைத் தலையால் பாதிக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்
கதைக்களம்
நாயகன் நிஷாந்த் இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையுடன் இருக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நிஷாந்த், அவரது வழுக்கைத் தலையால் திருமண வாழ்க்கை தடைபட்டு வருகிறது.
இந்நிலையில் நிஷாந்த் வீட்டிற்கு அருகே இருக்கும் நாயகி ஷாலினி அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். திருமணம் நடக்கும் நிலையில் நிஷாந்த் திடீரென்று திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
இறுதியில் நிஷாந்த் திருமணத்தை நிறுத்தியது ஏன்? நிஷாந்த், ஷாலினி இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் நிஷாந்த், இளம் வயதில் வழுக்கைத் தலையோடு இருப்பவர்களின் மன வலியை பிரதிபலிக்கும் விதத்தில் நடித்து இருக்கிறார். காதல், வருத்தம், சோகம், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
முதல் நாயகியாக நடித்திருக்கும் ஷாலினி, குடும்ப பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். இரண்டாவது நாயகியாக வரும் வர்ஷினி, மாடர்ன் பெண்ணாகவும், இன்ஸ்டா ரீல் செய்யும் பெண்ணாகவும் நடித்து இருக்கிறார்.
ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா என அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். குறிப்பாக ரோபோ சங்கர் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.
இயக்கம்
வழுக்கைத் தலையால் பாதிக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நவீத் எஸ்.ஃபரீத். பலருக்கும் வழுக்கையால் மன வலி ஏற்பட்டு இருக்கும். அந்த வலியை காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் இந்த காமெடி சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. கொஞ்சம் சீரியசாகவும், காட்சிகள் அழுத்தமாகவும் திரைக்கதை அமைத்து இருந்தால் ரசித்து இருக்கலாம். காமெடி நடிகர்கள் பலர் இருந்தாலும் சிரிப்பு வராதது வருத்தம்.
இசை
ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ரயீஷ் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.
தயாரிப்பு
Adler என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











