என் மலர்


எஸ்/ஓ காலிங்கராயன்
பழங்குடி மக்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை கொடுத்த காலிங்கராயன் பற்றிய கதை
கதைக்களம்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி பெண்கள் சிலர் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் களத்தில் இறங்குகிறார். மறுபக்கம், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு வனப்பகுதியில் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்படுகிறார் நாயகன் உதய கிருஷ்ணா. இவரை பழங்குடியினப் பெண் தென்றல் காப்பாற்றி ஆதரவு கொடுத்து வருகிறார். குண்டடிப்பட்டதால் தனது பழைய நினைவுகளை இழந்து விடுகிறார் உதய கிருஷ்ணா.
இவரை பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் அந்த ஊருக்குள் விசாரிக்கிறார், அப்போதுதான் உதய கிருஷ்ணா பெரிய ஜமீனின் மகன் என்பது தெரிய வருகிறது. இதனை அறிந்துக் கொண்ட உதய கிருஷ்ணா தன்னை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
இறுதியில் தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் கும்பல் யார் என்பதை உதய கிருஷ்ணா தெரிந்துக் கொண்டாரா? உதய கிருஷ்ணாவை கொல்ல முயற்சிக்கும் கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதய கிருஷ்ணா நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவரது உடல் அமைப்பு ஹீரோவுக்கான தோற்றம் இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். இவருக்கு அடுத்ததாக இரண்டாவது நாயகனாக நடித்து இருக்கும் படத்தின் இயக்குநர் பாரதி மோகன் கவனம் பெற்றிருக்கிறார். விசாரிக்கும் தோரணை, ஆக்சன் என நடிப்பில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகியாக பழங்குடி சமூகப் பெண் செல்லக்கிளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தென்றல் எதார்த்தமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாபு, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
பல ஆண்டுகளுக்கு முன்பு பாசன கால்வாய் கட்டிய காலிங்கராயனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாரதி மோகன். பழங்குடி மக்களுக்கு 500 ஏக்கர் நிலத்தை அபகரிக்க அரசியல் அதிகாரம் படைத்த கும்பல் முயற்சிப்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். திரைக்கதை தெளிவில்லாமல் நகர்த்தி இருக்கிறார். அதுபோல், காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது. உழுபவரே முதன்மையானவர், அவருக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்.
இசை
பாரதி மோகனின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கிருஷ் சிவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
சந்திரன் சாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.






