என் மலர்


சேவகர்
ஊருக்கு நல்லது செய்யும் சாமானிய மனிதனுக்கும் தீங்கு செய்யும் அமைச்சருக்கும் இடையே நடக்கும் கதை.
கதைக்களம்
தென்காசி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் பிரஜின், நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இதனால் அந்த ஊர் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு பகையாளியாக மாறுகிறார். அமைச்சர் ஆடுகளம் நரேன், போலீஸ் மற்றும் ரவுடிகள் மூலம் பிரஜினுக்கு தொந்தரவு கொடுக்கிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ், பிரஜின் தந்தையை காவல் நிலையத்தில் வைத்து அடிக்கிறார்கள். இதை பார்த்து கோபப்படும் பிரஜின், போலீஸ் இன்ஸ்பெக்டரை காவல் நிலையத்திலேயே அடித்து கொல்கிறார். இந்த விஷயம் பெரிய அளவில் பேசப்படுகிறது. தனிப்படை அமைத்து பிரஜின் மற்றும் நண்பர்களை பிடிக்க போலீஸ் திட்டம் போடுகிறது.
இறுதியில் பிரஜின் போலீசிடம் சிக்கினாரா? அமைச்சர் ஆடுகளம் நரேனை பிரஜின் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், பொதுமக்களுக்கு நல்லது செய்பவராகவும், அநியாயத்தை தட்டி கேட்கும் வீரனாகவும் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷகானா பெரியதாக வாய்ப்பு கொடுக்க வில்லை. போலீஸ் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமைச்சராக வரும் ஆடுகளம் நரேன் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
இயக்கம்
மக்களுக்கு நல்லது செய்யும் நல்லவனுக்கும் அதிகாரத்தால் ஊரை ஏமாற்றும் அமைச்சருக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபினாத். ஒவ்வொரு அமைச்சரும் நம் நாட்டின் சேவகர்கள் என்று சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், அது பெரியதாக எடுபடவில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாதது வருத்தம். திரைக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியவில்லை.
ஒளிப்பதிவு
பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அதிகம் கவரவில்லை.
இசை
ஆர்.டி மோகனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இரைச்சலை கொடுத்து இருக்கிறார்.
தயாரிப்பு
சில்வர் மூவீஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










